1,300 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.6 கோடி தீர்வு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1,300 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.6 கோடியே 2 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1,300 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.6 கோடியே 2 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.
லோக் அதாலத்
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா கோர்ட்டு நீதிபதி சுபத்ரா, முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், விரைவு விசாரணை கோர்ட்டு நீதிபதி விர்ஜின்வெஸ்டா, நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி சிட்டிபாபு, எண்.2 நீதிபதி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி விஜயா. லோக் அதாலத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. இதுபோன்ற லோக் அதாலத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை பயன்படுத்தி சமரச தீர்வு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
சமரச தீர்வு
மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 11 அமர்வுகளாக நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் மொத்தம் ஆயிரத்து 300 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரச தீர்வு மூலம் முடிவு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.6 கோடியே 2 லட்சத்து ஆயிரத்து 893 தீர்வாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த 3 தம்பதிகள் சமரச முயற்சியின்பேரில் மீண்டும் சேர்ந்து வாழ முடிவாகி சேர்த்து வைக்கப்பட்டனர்.