மோசடி வழக்குகளில் சிக்கி நிற்கும் கார்கள்
மோசடி வழக்குகளில் சிக்கிய கார் உள்ளிட்ட வாகனங்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
கோவை
மோசடி வழக்குகளில் சிக்கிய கார் உள்ளிட்ட வாகனங்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
கார்கள்
கோவையில் கடத்தல், மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன. பின்னர் அவை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டிய ஆவணமாகி விடுகிறது.
எனவே அது போன்று பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் நிலைய வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன. அந்த வகையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன.
துருப்பிடித்து வீணாகிறது
ஆனால் அங்கு போதிய இடம் இல்லாததால் அந்த கார்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல் லப்பட்டு நிறுத்தப்பட்டன. அவை அனைத்தும் பல லட்சம் மதிப்பிலானவை ஆகும்.
ஆனால் வழக்கு காரணமாக மழை, வெயில் என ஒரே இடத்தில் நிற்பதால் நாளுக்கு நாள் அந்த வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. கார்களின் சில பாகங்கள் துருப்பிடித்து தானாகவே உடைந்து உருக்குலையும் அவலநிலை ஏற்படுகிறது.
உரிய நடவடிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களின் மதிப்பு ரூ.5 கோடிக்கும் மேல் இருக்கும். வழக்கு காரணமாக அந்த வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வழக்கு முடிந்த பின்னர்தான் கார்களை ஏலம் விட முடியும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதனால் அவை கடைசியில் பழைய இரும்பு எடைக்கு போகும் நிலை ஏற்படுகிறது. வழக்குகளை விரைந்து முடித்து ஏலம் விட்டால் வருவாய் கிடைக்கும். கார்களும் பயன்பாட்டில் இருக்கும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மோசடி வழக்குகள்
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, விபத்து, கொலை வழக்குகளில் சிக்கிய கார்களை கோர்ட்டு அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மோசடி வழக்குகளில் சிக்கிய கார் உள்ளிட்ட வாகனங்களை எடுக்க முடியாது.
வழக்கு முடிந்த பிறகு அந்த கார்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும். மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல கார்கள்தான் இங்கு நிறுத்தப்பட்டு உள்ளன என்றனர்.