கார்கள் நேருக்கு நேர் மோதல்; தந்தை- மகள் பலி
தா.பேட்டை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகள் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தா.பேட்டை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகள் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மெக்கானிக்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், குடித்தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). கார் மெக்கானிக். இவரது மனைவி கஜபிரியா (31). இந்த தம்பதிக்கு ஹர்னிதா (11) என்ற மகளும், விசாகன் (6) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் வடிவேல் தனது அண்ணன் மகன் திருமணத்திற்கு குடும்பத்துடன் காரில் நேற்று மாலை புறப்பட்டு சென்றார். காரை வடிவேல் ஓட்டினார்.
கார் முசிறி - துறையூர் செல்லும் சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே மேல கொட்டம் பிரிவு ரோடு தனியார் டயர் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே துறையூரில் இருந்து முசிறி நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் முசிறி அருகே வடுகபட்டி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ராஜ்குமார் (32), பிரதாப் (29), சுனில்குமார் (30) ஆகியோர் வந்துள்ளனர். காரை ராஜ்குமார் ஓட்டியுள்ளார்.
2 பேர் சாவு
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 2 கார்களும் நேருக்கு, நேர் மோதி கொண்டன. இதில் படுகாயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மனைவி கஜபிரியா, மகன் விசாகன், மகள் ஹர்னிதா பலத்த காயம் அடைந்தனர். எதிரே காரில் வந்த ராஜ்குமார், சுனில்குமார், பிரதாப் ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் வடிவேல் மகள் ஹர்னிதா இறந்தார். பின்னர் கஜபிரியா, விசாகன் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ராஜ்குமார், பிரதாப், சுனில்குமார் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
இந்தவிபத்து குறித்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.