கேரட் விலை கடும் வீழ்ச்சி

கொடைக்கானலில் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மாடுகளுக்கு தீவனமாகி வருகிறது.

Update: 2023-01-28 16:57 GMT

கேரட் சாகுபடி

கொடைக்கானல் மேல்மலைக்கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை, பூம்பாறை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.

கேரட், உருளைக்கிழங்கு, மலைப்பூண்டு உள்ளிட்ட பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

சமீபத்தில், கவுஞ்சி கிராமத்தில் கேரட் பயிரிடப்பட்டது. தற்போது அவை விளைச்சல் அடைந்துள்ளது. ஆனால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 1 கிலோ கேரட் ரூ.30 வரை விற்பனையானது.

விலை வீழ்ச்சி

தற்போது வெளிமாநில, வெளிமாவட்டங்களில் விளைவிக்கப்படும் கேரட் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானலில் கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒரு கிலோ கேரட் அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வயல்களில் கேரட்டுகளை அறுவடை செய்வதற்கான கூலி கூட கிடைப்பதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

விலைவீழ்ச்சி எதிரொலியாக மாடுகளுக்கு தீவனமாக கேரட் செடிகள் மாறி விட்டன. கேரட்டுகளை அறுவடை செய்யாமல், உழவு செய்து வயல்களிலேயே அழிக்கும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கேரட் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரம், விதை, பராமரிப்பு, கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட கேரட் செடிகளின் மீது உழவு செய்து வருகிறோம். மேலும் அடுத்த கட்டமாக எந்த பயிர் சாகுபடியில் ஈடுபடுவது என்று குழப்பத்தில் இருக்கிறோம். எனவே விவசாயிகளின் நலன் கருதி மலைக்காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்ய தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். தற்போது கேரட் விவசாயத்தில் நஷ்டம் அடைந்துள்ள மலைக்கிராம விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்