தச்சு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஒருநாள் வேலை நிறுத்தம்
ராஜபாளையத்தில் தச்சு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் தச்சு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தச்சு தொழிலாளர்கள்
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் தச்சு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த ஆண்டு தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.770 நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது உயர்ந்துள்ள கேஸ், பெட்ரோல், வீட்டு வாடகை, சொத்து வரி உயர்வு, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைவாசி காரணமாகவும், அன்றாடம் வேலைக்கு பயன்படுத்தி வரும் பொருட்களின் வாடகை, கூலியாட்களின் அன்றாட செலவு, உபகரணங்கள், தேய்மானம் மற்றும் பிளேடு உள்ளிட்டவை உடைந்து விடும்.
இதனால் செலவு போக நாள் ஒன்றுக்கு ரூ.500 மட்டுமே கிடைப்பதால் தங்களின் குடும்ப செலவு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாக தச்சு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கை
எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.130 உயர்த்தி தினக் கூலியாக ரூ.900 வழங்க கோரி நேற்று ஒரு நாள் தச்சு தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு, கூலியை உயர்த்தி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தச்சு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.