கழுத்தை அறுத்து தச்சுத்தொழிலாளி படுகொலை

கள்ளிமந்தையம் அருகே, கழுத்தை அறுத்து தச்சுத்தொழிலாளியை கொலை செய்த கள்ளக்காதலியை போலீசாா் கைது செய்தனர்.;

Update: 2023-06-21 17:00 GMT

கள்ளத்தொடர்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). தச்சுத்தொழிலாளி. இவர், வெளியூர்களுக்கு சென்று வேலை செய்து வந்தார்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நத்தம் தாலுகா சாணார்பட்டி அருகே உள்ள வலையப்பட்டிபுதூருக்கு ராஜமாணிக்கம் வேலைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாப்பு என்பவரின் மனைவி பாப்பாத்தி (வயது 45) என்பவருக்கும், ராஜமாணிக்கத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

கழுத்தை அறுத்து கொலை

இந்தநிலையில் வீட்டை விட்டு கள்ளக்காதல் ஜோடி வெளியேறினர். பின்னர் இவர்கள், கள்ளிமந்தையம் அருகே உள்ள பொருளூரில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிக்கு கீழ் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.

ராஜமாணிக்கம் தச்சு வேலைக்கும், பாப்பாத்தி விவசாய கூலி வேலைக்கும் சென்று வந்தனர். நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கம் பிணமாக கிடந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கள்ளக்காதலி கைது

இதற்கிடையே ராஜமாணிக்கத்துடன் தங்கியிருந்த அவரது கள்ளக்காதலி பாப்பாத்தி திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அவா் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் பாப்பாத்தி பயன்படுத்திய செல்போனின் செயல்பாட்டை ஆய்வு செய்தனர். அப்போது நத்தம் தாலுகா வலையப் பட்டிபுதூரில் இருந்து அவர் பேசுவது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, பதுங்கி இருந்த பாப்பாத்தியை கைது செய்தனர்.

ரூ.30 ஆயிரம்

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், வீட்டை விட்டு வெளியேறிய போது ராஜமாணிக்கத்துக்கு ரூ.30 ஆயிரத்தை பாப்பாத்தி கொடுத்துள்ளார். அந்த பணத்தை மதுபானம் குடித்து ராஜமாணிக்கம் செலவழித்து விட்டார். இதனால் பாப்பாத்தி ஆத்திரம் அடைந்தார். தான் கொடுத்த பணத்தை அவர் திரும்ப கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாப்பாத்தி, அரிவாளால் ராஜமாணிக்கத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் தனது உறவினர் இறந்து விட்டதாகவும், அவசரமாக வெளியூர் செல்ல வேண்டும் என்று கூறியும் 'லிப்ட்' கேட்டு கள்ளிமந்தையம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அதன்பிறகு அங்கிருந்து பஸ் ஏறி தனது சொந்த ஊரான வலையப்பட்டிபுதூர் வந்து விட்டார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் அவரை கைது செய்தோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்