சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

மாம்பழம் ஏற்றி வந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-08-12 20:15 GMT

தர்மபுரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). சரக்கு வேன் டிரைவர். இவர், தர்மபுரியில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா என்ற இடத்துக்கு சென்று 136 பெட்டிகளில் மாம்பழங்களை வாங்கினார். பின்னர் அந்த பழங்களை, கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்தார். விற்றது போக மீதமுள்ள 30 பெட்டி மாம்பழங்களுடன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழியாக தர்மபுரி நோக்கி சென்றார்.

திண்டுக்கல்-கரூர் மாவட்ட எல்லை பகுதியான ரங்கமலை கணவாய் அருகே நான்கு வழிச்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் 30 பெட்டிகளில் இருந்த மாம்பழங்கள் ரோட்டில் கொட்டி சிதறியது. மேலும் மாம்பழங்கள் சாலையோர பள்ளத்தில் உருண்டு ஓடியது.

இதற்கிடையே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயம் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக சக்திவேல் உயிர் தப்பினார். விபத்து குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்