டிராக்டர் மீது சரக்கு வேன் மோதல்

கொடைரோடு அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-13 16:34 GMT

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). டிராக்டர் டிரைவர். நேற்று இவர், தண்ணீர் டேங்கருடன் கூடிய டிராக்டரை காமலாபுரத்தில் இருந்து ஜல்லிப்பட்டி பிரிவு நோக்கி ஓட்டி சென்றார். கொடைேராடு அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், மெட்டூர் மேம்பாலத்தில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து பள்ளப்பட்டிக்கு வந்த சரக்கு வேன், முன்னால் சென்ற டிராக்டர் மீது திடீரென மோதியது. இதில் நிலைதடுமாறி தண்ணீர் டேங்கருடன் டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்தது. மேலும் சரக்கு வேன், சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் முருகேசன் படுகாயம் அடைந்தார். இதேபோல் சரக்கு வேனை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா தென் குத்து சக்திநகரை சேர்ந்த ராஜராமன் (63) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை, அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாரும், அம்மையநாயக்கனூர் போலீசாரும் அங்கு வந்து கிரேன் மூலம் டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காமலாபுரம் பிரிவு முதல் செம்பட்டி வரை சாலை விரிவுப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக, தண்ணீர் டேங்கருடன் டிராக்டர் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்