ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நடுவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் அதில் பயணம் செய்த பெண் உள்பட 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Update: 2022-10-21 11:31 GMT

கூடலூர்:

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. முக்கிய சாலை என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி கார் ஒன்று சென்றது. அப்போது நடுவட்டம் அரசு தேயிலைத் தோட்டம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் சாலையோரம் வைத்து இருந்த அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மோதியது. தொடர்ந்து தேயிலைத் தோட்டத்துக்கு புகுந்து சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காரில் இருந்த பெண் உள்பட 2 பேரை காயங்களுடன் மீட்டனர். தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கூடலூரைச் சேர்ந்த நான்சி உள்பட 2 பேர் என தெரியவந்தது. மேலும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் கார் பலத்த சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் தேயிலை தோட்ட பள்ளத்தில் விழுந்து கிடந்த காரை மீட்கும் பணி இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் சாலையில் வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்