நின்றிருந்த லாரி மீது கார் மோதல்; வாலிபர் பலி

நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.

Update: 2023-01-20 19:26 GMT

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கொட்டை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 55). இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலுக்கு தனது மனைவி இந்திராணி (50), மகன் ராஜேஷ் (31) ஆகியோருடன் வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். காரை தம்மம்பட்டி கடை வீதி பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் சிவக்குமார் (27) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை திருச்சி அருகே கல்லணை சாலையில் கிளிக்கூடு என்ற இடத்தில் கார் வந்தபோது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ராஜேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் டிரைவர் சிவகுமார் பலத்த காயமடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த குமரேசன், இந்திராணி ஆகியோர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்