பாலத்தில் கார் மோதல்; மகள், மகனுடன் பெண் பலி

பாலத்தில் கார் பயங்கரமாக மோதியதில் மகள், மகனுடன் பெண் பலியானார். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-08-18 00:29 GMT

சிவகாசி,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ராஜா (வயது 49). இவர் கோவையில் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மெர்லின் (44).

இவர்களுடைய மகள் ரோஷினி (15), மகன் ரோகித் (13). இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் இரவில் ரிச்சர்ட் ராஜா குடும்பத்தினரும், அவருடைய சகோதரர் ஜான்சன் ராஜாவும் (56) காரில் கோவைக்கு புறப்பட்டனர்.

3 பேர் பலி

நள்ளிரவில் அந்த கார் கோவில்பட்டி-சாத்தூர் இடையே நள்ளிசத்திரம் அருகே வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் உள்ள பாலத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த சிறுவன் ரோகித் சம்பவ இடத்திலேயே இறந்தான். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மெர்லின், ரோஷினி, ரிச்சர்ட்ராஜா, ஜான்சன்ராஜா ஆகியோரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மெர்லின் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து மற்ற 3 பேரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி ரோஷினி உயிரிழந்தார்.

தீவிர சிகிச்சை

ரிச்சர்ட்ராஜா, ஜான்சன்ராஜா ஆகியோருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்தில் தாய், மகன், மகள் ஆகிய 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்