லாரி மீது கார் மோதல்; 3 வாலிபர்கள் உயிர் தப்பினர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் 3 வாலிபர்கள் உயிர் தப்பினர்.
திருச்சி பீமநகர், காஜாமலையை சேர்ந்த 3 வாலிபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டையை சுற்றி பார்ப்பதற்காக நேற்று காலை ஒரு காரில் புறப்பட்டனர். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா இரூர் பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதே சாலையில் முன்னால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மரங்களை ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாடாலூர் போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.