பர்கூர்
பர்கூர் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கன்டெய்னர் மீது கார் மோதல்
ஒடிசாவை சேர்ந்தவர்கள் அணில் (வயது 25), பீஷ்ணு (23), ரமேஷ் (24), ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மனீஷ் (23), சலான் (25) இவர்கள் 5 பேரும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் 5 பேரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு ஓசூரில் இருந்து கார் மூலம் சென்றனர்.
இந்த காரை அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அசாமை சேர்ந்த அக்பர் ஹாசன் (22) என்பவர் ஓட்டி வந்தார். பர்கூர் அருகே உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில் சென்றபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
6 பேர் படுகாயம்
இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தீயணைப்பு படையில் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கார் மற்றும் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.