கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பரிகாரங்கள் செய்யக்கூடாது; தனி இடம் ஒதுக்கப்படும்; தாசில்தார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

கொடுமுடியில் காவிரி ஆற்றங்கரையில் யாரும் பரிகாரங்கள் செய்யக்கூடாது எனவும் அதற்காக தனி இடம் ஒதுக்கப்படும் எனவும் தாசில்தார் தலைைமயில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-07-24 17:48 GMT

கொடுமுடி

கொடுமுடியில் காவிரி ஆற்றங்கரையில் யாரும் பரிகாரங்கள் செய்யக்கூடாது எனவும் அதற்காக தனி இடம் ஒதுக்கப்படும் எனவும் தாசில்தார் தலைைமயில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பரிகார தலம்

கொடுமுடியில் புகழ்பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்து உள்ள இந்த கோவிலானது சிறந்த பரிகார தலமாக உள்ளது.

இதனால் இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து திருமண தடை நிவர்த்தி, குழந்தை பாக்கியம் பெற, முன்னோர்களுக்கான திதி தர்ப்பணங்கள் கொடுக்கவும், பரிகாரங்கள் செய்து சாமியை வழிபடவும் வந்து செல்கிறார்கள். இதற்காக காவிரிக்கரையில் பரிகாரம் செய்வதற்காக ஏராளமான பரிகார அமைப்பாளர்கள் கொடுமுடி பகுதியில் உள்ளனர்.

அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

இந்த நிலையில் காவிரிக்கரை பரிகார அமைப்பாளர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவில் செயல் அதிகாரி சுகுமார் (பொறுப்பு), கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், குளித்தலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், கரூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் கலந்து கொண்டனர்.

காவிரி ஆற்றங்கரையில்...

கூட்டத்தில், 'காவிரி கரையில் இனி வரும் காலங்களில் யாரும் பரிகாரங்கள் செய்யக்கூடாது. அதற்கான இடம் கோவில் சார்பில் தனியாக ஒதுக்கப்படும். பரிகாரங்களை முறையான பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். பரிகாரம் செய்பவர்களுக்கு உண்டான அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை முறையான பயிற்சி பெற்றவர்கள் கோவில் செயல் அதிகாரியிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்,' எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், 'காவிரி கரையில் உள்ள பரிகார நிலையங்களை வருகிற 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் பரிகார நிலையங்கள் அகற்றப்படும். அதற்கான செலவுகளை பரிகார நிலைய அமைப்பாளர்கள் தான் வழங்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு பரிகார அமைப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட பரிகார அமைப்பாளர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்