கஞ்சா எண்ணெய் பதுக்கிய மேலும் 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பதுக்கிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-05 10:14 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதை பொருள்

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்த நடந்து வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், களைக்கொல்லி, வெங்காயவிதை, கடல் அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது போலீசார் பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். அதே போன்று போதை பொருட்கள் கடத்தலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தூதுக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடியை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு உள்பட அனைத்து போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கைது

இந்த நிலையில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் கிடைத்த தகவலின் பேரில் அவரது தனிப்படையினர், தூத்துக்குடியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி இந்திராநகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 லிட்டர் கஞ்சா எண்ணெயை (ஹசீஷ்) தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த மோகன் மகன் ஆனந்த குமார் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இந்திரா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32), தூத்துக்குடி மேல சண்முகபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் படையப்பா என்ற அருண்குமார் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்