46 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து

கரூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆண்டாய்வில் 46 வாகனங்களின் தகுதி சான்றுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

Update: 2023-05-24 18:40 GMT

ஆண்டாய்வு

கரூரில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் நேற்று பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆண்டாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:- கரூர் மாவட்டத்தில் நேற்று 89 பள்ளிகளின் 350 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 46 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி போன்றவைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த கட்டாயமாக்கப்பட்டது. அனைத்து பள்ளி பஸ்களிலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அனைத்து பஸ்களும் உள்ளனவா, அவற்றினுடைய டிரைவர்கள் சரியான முறையில் இருக்கிறார்களா, மேலும், பஸ்சில் அனைத்து வசதிகளும் இருக்கிறதா, ஏறக்கூடிய படியிலிருந்து பொதுவான கட்டமைப்பு உறுதியாக உள்ளதா என்பது முதற்கொண்டு பஸ்கள் சீராக இயங்குகிறதா, உள்ளே இருக்கக்கூடிய இருக்கைகள் சரியான முறையில் உள்ளதா மற்றும் அவசர வழி சரியாக இயங்குகிறதா உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பரிசோதனை செய்யப்பட்டு பள்ளி செல்லும் குழந்தைகள் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

வருடம் முழுவதும் தொடர் ஆய்வு

தொடர்ந்து குறைபாடு ஏதும் உள்ள பஸ்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்படாது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்படும். இந்த ஒரு ஆண்டாய்வு மட்டும் இல்லாமல் வருடம் முழுவதும் தொடர் ஆய்வு மூலமாக காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பாதுகாப்பினை உறுதி செய்வார்கள். பொதுவான குறைபாடுகள் என்று பார்த்தால் சென்ற ஆண்டு கொரோனா முடிந்து வந்த பின்னர் நிறைய பஸ்கள் இயங்காமல் இருந்தது. அப்போது நாம் இன்னும் கவனமாக செயல்பட்டோம். இருந்தாலும் சில வாய்ப்புகள் கொடுத்து அது இயங்குவதற்கு நாம் அனுமதி அளித்தோம்.

டிரைவர்கள் சீருடை அணிந்து...

அவசர வழி முக்கியம் ஏதாவது ஆபத்து ஏற்படும் போது அதை பார்க்க வேண்டும். முக்கியமாக தீயணைப்பான் கருவி சரியான காலத்தில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். மேலும், டிரைவர்கள் சீருடை அணிந்து சரியான முறையில் பஸ் இயக்குவதற்கு வரவேண்டும். அவர்கள் இந்த ஆய்வுக்கு வரும்போது கூட அடிப்படை விஷயங்களை கடைபிடிக்கிறார்களா? என பார்த்து அவர்கள் மீதும், பஸ்சின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து பஸ்கள் சரியான முறையில் இல்லை என்றாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

உடல் தகுதி வேண்டும்

பஸ்சை இயக்குவதற்கு வயது வரம்பு கிடையாது. ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கும், ஓட்டுனர் உரிமத்துடன் வாகனத்தை இயக்குவதற்கும் உடல் தகுதி வேண்டும். குறிப்பாக டிரைவர்களுக்கு பார்வை, கேட்கும் திறன், உடல் திறன், சர்க்கரை, ரத்த கொதிப்பு இருக்கிறதா என்பதை உடற்தகுதி ஆய்வு செய்து இருக்க வேண்டும். 70 வயது உள்ளவர்கள் கூட உடல் தகுதியோடு இருந்தால்தான் பஸ் இயக்குவதற்கு அனுமதி வழங்குவதற்கு அறிவுரை வழங்க வேண்டும். அதிகமான வயது முதிர்ந்தவர்களை இந்த பணியில் அமர்த்த வேண்டாம் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தில் சி.சி.டி.வி. கேமரா வைக்க வேண்டும். இந்த ஆய்வு என்பது ஒரு பகுதிதான். பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பு நலன் கருதி இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும், என்றார்.

பின்னர் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீத்தடுப்பு ஒத்திகை செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்