சோதனைச்சாவடி வளாக கடைகளுக்காக நடைபெற்ற ஏலம் ரத்து - பொதுப்பணித்துறை அதிகாரி அறிவிப்பு

கும்மிடிப்பூண்டி எளாவூரில் உள்ள சோதனைச்சாவடி வளாக கடைகளுக்காக நடைபெற்ற ஏலம் ரத்து செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-16 08:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் சென்னை-கொல்கதா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2018-ம் ஆண்டு நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இதன் வளாகத்தில் ஓட்டல், வாகன உதிரி பாகங்கள் மற்றும் மருந்து கடை வைப்பதற்காக 10 கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த கடைகளை ஏலம் எடுப்பதில் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மறு தேதி அறிவிக்கப்படாமல் அந்த ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த கடைகள் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கின்றன.

இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி பொதுபணித்துறையினர் சார்பில் அந்த கடைகளுக்காக ஏலம் நடத்தப்பட்டது. அப்போது ஏலம் குறித்து எவ்வித முன் அறிவிப்பும் முறையாக செய்யவில்லை என சிலர் சோதனைச்சாவடி வளாகத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஏல அரங்கில் வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அதன் பின்னர், ஏல அரங்கின் ஒரு பகுதியில் அனைத்து கட்சி பிரமுகர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க.விற்கு தலா ஒரு கடை என்றும் எளாவூர் ஊராட்சிக்கு 2 கடைகள் என்றும் மீதம் உள்ள 5 கடைகள் தி.மு.க.விற்கு என்றும் முடிவாகி அவர்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொது ஏலத்தில் சாமானியர்கள் பங்கு பெற முடியவில்லையே என்கிற புகார் இருந்து வந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட பொது பணித்துறை செயற்பொறியாளருக்கு, பொன்னேரி உதவி செயற்பொறியாளர் கவிதா நேற்று ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், கடந்த 13-ந் தேதி சோதனைச்சாவடியின் 10 கடைகளுக்கான பகிரங்க பொது ஏலம் நடைபெற்றது. ஏலம் நடைபெற்ற கூட்டரங்கில் ஏல தாரர்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தாலும், ஏலம் விட முடியாத படி கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதாலும் ஏலத்தை முறையாக நடத்த முடியவில்லை. எனவே ஏலம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்