விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
விக்கிரமசிங்கபுரம்:
இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதில் கன்னடியன், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி கால்வாயின் பாசனத்தை நம்பி இருபோக சாகுபடி விளை நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை நம்பி அனேக குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் செய்ய கட்டாயம் ஜூன் மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருக்கும் போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது, மழை பெய்து அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் இருந்தும், தண்ணீர் திறக்காமல் தமிழக அரசு இருக்கிறது. இது கண்டனத்திற்குரியதாகும். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதி விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சமயத்தில் கால்வாயில் உள்ள அமலைச்ெசடிகளை அகற்றி மற்றும் தூர்வாரி தண்ணீர் கடைமடை வரை செல்ல ஆவணம் செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் செய்யாததால் நான் எனது சொந்த செலவில் முடிந்தவரை கால்வாய்களை தூர் வாரியுள்ளேன். தற்போது தண்ணீர் திறக்காமல் கால தாமதமாக தண்ணீர் திறந்தால் விவசாயிகள் எந்த பயனும் அடையமாட்டார்கள். ஆகையால் விவசாயிகள் நலன் கருதி கன்னடியன் கால்வாய், வடக்கு கோடை மேலழகியன், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி கால்வாய்களில் உடனே தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.