கால்வாய்களை தூர்வார நடவடிக்கை-அப்பாவு தகவல்
ராதாபுரம் தொகுதியில் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
வள்ளியூர்:
ராதாபுரம் தொகுதியில் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குளங்களை மேம்படுத்துவது குறித்து விவசாயிகள் மற்றும் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம், பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பில் உள்ள சபாநாயகர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அணைகளை ஒன்றிணைக்க...
பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆலந்துறையாறு, சூறாவளி அணைக்கட்டுகளுக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், கஞ்சிபாறை அணைக்கட்டின் உயரத்தை 2 அடி உயர்த்தவும், சூறாவளி அணைக்கட்டு கால்வாயை அகலப்படுத்தவும் ரூ.30 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுக்கு இந்த ஆண்டே நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கேட்டுள்ளேன்.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சுசீந்தரம் அருகே மணக்குடி பகுதியிலிருந்து மின்நீரேற்றம் செய்து, குழாய் மூலம் ராதாபுரம் கால்வாயில் கொண்டுவரும் திட்டத்தையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
பாபநாசம், மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, அனுமன்நதி, பொய்கை நீர்த்தேக்கங்களை ஒன்றாக இணைக்கும் திட்டத்திற்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டு விரைவாக திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராதாபுரம் கால்வாயை பலப்படுத்தி, தூர்வாரி தொடர்ந்து 150 கன அடி தண்ணீர் எடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கால்வாய்களை தூர்வார...
ராதாபுரம் தொகுதியில் நிலத்தடியில் கடல்நீர் உட்புகாமல் தடுப்பதற்காக ரூ.30 கோடியில் கடைமடை தடுப்பணை கட்டுவதற்கும், அனுமன்நதியிலும் ரூ.5 கோடியில் கடைமடை தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராதாபுரம் தொகுதியில் உள்ள வள்ளியூரான் கால்வாய், வடமலையான் வடக்கு, தெற்கு கால்வாய்கள், நாங்குநேரியான் கால்வாய், நம்பியாறு வலதுபுற, இடதுபுற கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னிமாரா தோப்பு அருகில் அனுமன்நதியில் மேலும் ஒரு படித்துறை அமைக்கவும், அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் ஏற்பாடு செய்யப்படும்.
ஒன்றிய அரசின் 60 சதவீத நிதியுடனும், மாநில அரசின் 40 சதவீத நிதியுடனும் ஆர்.ஆர்.ஆர். திட்டத்தில் குளங்களுக்கு செல்லும் பிரதான கால்வாய்கள் பலப்படுத்துதல், குளக்கரைகள், மடையை சீர் செய்தல், மறுகால்களை சீர் செய்தல் போன்ற பணிகள்மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன், மேற்பார்வை பொறியாளர் பத்மா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயணிகள் நிழற்குடை, ரேஷன் கடை
முன்னதாக காவல்கிணறு விலக்கு பகுதியில் ரூ.6 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை, காவல்கிணறு பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் ரூ.9 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை, காவல்கிணறு ஊரின் நடுவில் ரூ.6 லட்சத்தில் புதிய ரேஷன் கடை, வெள்ளக்கோயில் முதல் அந்தோணியார் ஆலயம் வரையிலும் ரூ.23 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை ஆகியவை அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, மொத்தம் ரூ.44 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ரூ.605 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு ரூ.605 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 1½ ஆண்டில் அந்த பணிகள் முடிந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
ராதாபுரம் தொகுதியில் 288 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படுகிறது. இதில் 100 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கவுன்சிலர் சாந்தி, காவல்கிணறு பஞ்சாயத்து தலைவர் இந்திரா, துணைத்தலைவர் மாம்பழ சுயம்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.