இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 21). இவர் அரசு போட்டித்தேர்வு எழுதுவதற்காக திருச்சியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு பிரியதர்ஷினியை காளையார் கோவிலை சேர்ந்த ராஜா என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஒரு மாதம் மட்டும் கணவர் வீட்டில் குடும்பம் நடத்தி வந்த பிரியதர்ஷினி பின்னர் தனது தாய் வீடான மாத்தூர் சொக்கலிங்கபுரத்திற்கு வந்து தங்கியிருந்து திருச்சியில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாத்தூரில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியதர்ஷினி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருப்பதி மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகிறார்.