கைதான செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

கைதான செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா? என மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்

Update: 2023-06-25 19:51 GMT

ஓமலூர்:-

கைதான செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா? என்று மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அ.தி.மு.க.வில் இணையும் விழா

ஓமலூர் சட்டமன்ற தொகுதி தாரமங்கலம் ஒன்றியம் அமரகுந்தியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி 3,500 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மணி எம்.எல்.ஏ. வரவேற்றார். சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், ராஜமுத்து, நல்லதம்பி, ஜெய்சங்கர், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 3,500 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். முன்னதாக அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு தனித்தனியாக சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நீங்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நீங்கள் மீண்டும் நிரூபித்து உள்ளீர்கள். அ.தி.மு.க.வை உடைப்பதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். அது உங்கள் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது.

சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. வென்றுள்ளது. மு.க.ஸ்டாலின் 3 முறை சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளார். அவர் வந்து என்ன செய்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.

11 மருத்துவக்கல்லூரிகள்

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பெரும்பாலான சாலைகள் போடப்பட்டன. பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டமைக்கு விருதுகளை பெற்றோம். தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். போக்குவரத்து வசதியை மேம்படுத்த 14 ஆயிரம் பஸ்களை வாங்கினோம். இன்று ஒரு பஸ் கூட வாங்க முடியவில்லை. அனைத்து துறைகளும் சீரழிந்து விட்டது. அதேபோன்று மருத்துவத்துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் விருது பெற்றோம். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் கால்நடைகளை வளர்த்து பயன்பெற வெளிநாட்டில் உள்ளது போன்று ரூ.3 ஆயிரம் கோடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா ஆசியாவிலேயே பெரியது. அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர். இங்குள்ள திட்டங்களை நிறைவேற்றுவதை விட்டு விட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார் முதல்- அமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் தான் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன.

செந்தில் பாலாஜி

மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்கிறார்கள். அதன்மூலம் கிடைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் யார் வீட்டுக்கு செல்கிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போதைய முதல்- அமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது குற்றம் சாட்டிய ஒருவரை அமலாக்கத்துறை இப்போது கைது செய்து இருக்கிறது.

அவரை காப்பாற்ற இன்று முயற்சி செய்கிறார். கைதி அமைச்சராக இருக்கலாமா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். முதல்- அமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அசோகன், சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், சின்னசாமி, ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் பெரியசாமி, ஒன்றிய இணைச் செயலாளர் செங்கோடன், நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், ஒன்றிய பேரவை செயலாளர் அன்பு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், நகர அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தசாமி, கணேசன், பாலசுப்பிரமணியம், ெரயில்வே காண்ட்ராக்டர் தாண்டா கவுண்டர், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ரஞ்சித்குமார், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யப்பன். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் இளங்கோ, இளைஞர் இளம் பெண்கள் பாசறை அவை தலைவர் மாணிக்க வாசகன், துணைசெயலாளர் வெங்கடேஷ், இணை செயலாளர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்