பாசன வாய்க்காலில் சேதமடைந்த மதகு சீரமைக்கப்படுமா?
வடபாதிமங்கலத்தில் பாசன வாய்க்காலில் சேதமடைந்த மதகில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இந்த மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
வடபாதிமங்கலத்தில் பாசன வாய்க்காலில் சேதமடைந்த மதகில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இந்த மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில், புனவாசல் பாசன வாய்க்கால் உள்ளது. வெண்ணாற்றில் இருந்து இந்த வாய்க்காலுக்கு தண்ணீர் வருகிறது.
இந்த வாய்க்கால் தண்ணீர் மூலம் புனவாசல், எள்ளுக்கொல்லை காலனி, வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
சேதமடைந்த மதகு
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புனவாசல் பாசன வாய்க்கால் மதகு சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை பாசன வாய்க்காலில் கொண்டு செல்வதற்கும், தண்ணீர் தேவையற்ற நேரத்தில் மூடுவதற்கும் அமைக்கப்பட்ட பாசன வாய்க்கால் திருகு மதகு குழாய் மற்றும் தடுப்பு பலகை சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக போதிய அளவில் தண்ணீர் பாசன வாய்க்கால் மூலம் செல்வதில்லை. கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால் மூலம் தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
புதர் மண்டி கிடக்கிறது
ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் போது கூட பம்பு செட் வைத்து தான் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறம் இருந்த போதிலும், தற்போது சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது.
சீரமைக்க வேண்டும்
பாசன வாய்க்கால் மதகு இருக்கும் இடம் தெரியாத அளவு செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.