மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள செய்களத்துர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. சிவகங்கை தனித்துறை ஆட்சியர் காமாட்சி தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்பிரமணி வரவேற்றார். முகாமில் பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, குடும்ப அட்டை, வேளாண்மை துறை சார்பில் சி.எம்.டி.டி.எம். உளுந்து, சுகாதாரத்துறை சார்பில் மருந்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டது.
முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. பேசுகையில், தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் மக்கள் தேவைகளை அறிந்து மக்களுக்காக மக்களுக்கான திட்டம் உடனுக்குடன் கிடைத்து வருகிறது. இதற்கு முன்னர் பட்டா கிடைக்க பல ஆண்டுகள் காத்திருந்தீர்கள். ஆனால் இப்போது உடனுக்குடன் பட்டா கிடைக்கிறது. இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்றார். இதில், தாசில்தார் சாந்தி, சுந்தர்ராஜ், மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, துணை தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் மலைச்சாமி, ராதா சிவசந்திரன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.