கடன் உதவி பெற சிறப்பு முகாம்
கடன் உதவி பெற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், மானாமதுரை மற்றும் தேவகோட்டை ஆகிய 3 வட்டாரங்களை சார்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுயதொழில் செய்ய ஆர்வம் இருந்தும், நிதி வசதி இல்லாத இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சியளித்து, அவர்கள் கற்றுக்கொண்ட தொழிலை சுயமாக தொடங்க தேவையான நிதியினை அனைத்து அரசு துறைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கு கடன் உதவி பெற உதவும் வகையில் வட்டார அளவில் கடன் விண்ணப்பம் பெறும் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம் மானாமதுரையில் புதன்கிழமை, வியாழக்கிழமை காளையார்கோவிலிலும், 29-ந் தேதி தேவகோட்டையிலும் காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் சேர்ந்த இளைஞா்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் போட்டோ 2, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வங்கிப்புத்தகம் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.