பிரசாரம் முடிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வெறிச்சோடியது; அரசியல் கட்சியினர் வெளியேறினர்

பிரசாரம் முடிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வெறிச்சோடியது. வெளியூரில் இருந்து வந்த அரசியல் கட்சியினரும் வெளியேறினார்கள்.

Update: 2023-02-26 21:08 GMT

பிரசாரம் முடிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வெறிச்சோடியது. வெளியூரில் இருந்து வந்த அரசியல் கட்சியினரும் வெளியேறினார்கள்.

எம்.எல்.ஏ. மரணம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த மாதம் 4-ந்தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 18-ந் தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களது கட்சி வேட்பாளர்களை அறிவித்தனர்.

அதன்படி தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் உள்பட 77 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் உள்ளனர்.

தேர்தல் திருவிழா

அரசியல் கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தனர்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரே தென்பட்டனர். வீதிகளில் அரசியல் கட்சி கொடி தோரணம் கட்டி தொங்கவிடப்பட்டும், சின்னங்கள் வரையப்பட்டும் இருந்தன. மேலும் தலைவர்கள் வந்ததால் மாலை தோரணங்கள் தொங்க விடப்பட்டன. அரசியில் கட்சியினர் வரும்போது ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும், பூரண கும்பமரியாதை கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். அதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் திருவிழா கோலம் பூண்டது.

பணம் -பரிசு பொருட்கள்

இதற்கிடையில் அதிக அளவில் அரசியல் கட்சியினரின் வாகனங்கள் வீதிகளில் உலா வந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். ஆளும் கட்சியினர், எதிர் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் காலை, மாலை வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்து தீவிரமாக வாக்குகள் சேகரித்தனர். இதனால் வாக்காளர்கள் எப்போதும் தங்களது வீடுகளை திறந்தே வைத்திருந்தனர்.

பணம், பரிசு பொருட்களால் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் திக்குமுக்காடி போனார்கள். நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் முடிந்து, விடுதி மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கிய வெளியூர் அரசியல் கட்சியினர் ஈரோட்டை காலி செய்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

வெறிச்சோடியது

இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வெளியூர் அரசியல் கட்சியினர் யாரேனும் ஈரோட்டில் தங்கி உள்ளார்களா? என்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது ஈரோட்டில் தங்கி இருந்த ஒருசில அரசியல் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். இதனால் அரசியல் கட்சியினர் யாரையும் காணவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் திருவிழாவாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்