215 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

215 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Update: 2022-09-06 14:28 GMT

காங்கயம்,

காங்கயம் கார்மெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 215 மாணவிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

மாணவிகளுக்கு சைக்கிள்கள்

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், கார்மெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 215 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

ரூ.1000 வழங்கும் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 780 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படித்தால் மட்டுமே வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிக்க சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தொலைநோக்கு பார்வையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

திறன் மேம்பாட்டு திட்டம் அரசு பள்ளியில் பயிலும் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவச் செல்வங்கள் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. நான் முதல்வன் என்கிற திட்டம் பள்ளி மாணவர்களிடம் திறமையை உருவாக்கி எதிர்காலத்தில் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற திட்டம் ஆகும். இத்திட்டம் திறனை மேம்படுத்தும் வகையில் படிக்கும் குழந்தைகள் அரசு வேலைக்காக மட்டும் காத்திருக்காமல் தங்களுடைய திறனை தொழிற்கல்வியில் மேம்படுத்திக் கொண்டு நீங்கள் தான் எதிர்காலம் என்கிற வகையில் தலை சிறந்த மாணவர்களை உருவாக்குவது நான் முதல்வன் என்கிற திட்டம் ஆகும்.

மன உறுதி

மாணவ மாணவிகள் பொது தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும்போது மிகுந்த வலிமையுடன் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். தவறான முடிவுகளுக்கு செல்லக்கூடாது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியும் வளர்த்துக்கொண்டு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்