அறுந்து போன காலணிகளை தூக்கி எறிவதால் அழிவின் விளிம்பில் செருப்பு தைக்கும் தொழில்

அறுந்து போன காலணிகளை தூக்கி எறிவதால் அழிவின் விளிம்பில் செருப்பு தைக்கும் தொழில் உள்ளது. அரசு உதவ வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-10-18 16:35 GMT

மனித உடலில் மிகவும் முக்கியமானதாக பாதம் கருதப்படுகிறது. ஒட்டுமொத்த உடலையும் பாதம் தான் தாங்கி கொண்டிருக்கிறது. இந்த பாதத்தை பாதுகாப்பது அவசியம். கல், முள், குச்சி, ஆணி உள்ளிட்ட பொருட்கள் பாதங்களை பதம் பார்த்து பஞ்சர் ஆக்கி விடுகின்றன. அதில் இருந்து பாதங்களை பாதுகாக்கும் கவசமாக திகழ்வது செருப்பு (காலணி) தான். இதற்காகவே நாம் செருப்புகளை அணிகிறோம். தரையின் சூட்டில் இருந்தும் செருப்புகள் நம்மை பாதுகாக்கிறது.

செருப்பு தைக்கும் தொழில்

நெருப்பின் அருமை குளிரில் தெரியும், செருப்பின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். ஒரு காலத்தில் ஒன்றிரண்டு மாடல்களில் மட்டுமே இருந்த செருப்புகள், காலத்தின் ஓட்டத்தால் தற்போது பல வடிவங்களில் கிடைக்கின்றன. நாகரிகமாக உலா வரவிரும்பும் மனிதர்கள் ஆடைக்கு ஏற்ப, நிகழ்ச்சிக்கு தக்க வகையில் செருப்புகளை அணிகின்றனர்.

கம்மல், ஆடை, வளையல், செருப்பு என ஒரே நிறத்தில் அணியும் பெண்களும் இருக்கின்றனர். எனவே துணிகளுக்கு போட்டியாக பலவித மாடல்களில் செருப்புகள் உள்ளன. எனவே புதிய மாடல் செருப்புகளை தேடி வாங்குவதை பலரும் விரும்புகின்றனர். இதனால் செருப்பு கடைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. மேலும் சாலை ஓரங்களில் கூட செருப்பு கடைகள் முளைத்து விடுகின்றன. அங்கு கூவி, கூவி செருப்புகள் விற்பனை களை கட்டி வருகிறது.

இதன் எதிரொலியாக, பிய்ந்து போகும் செருப்பை தைத்து போடாமல் குப்பையில் வீசிவிடும் வழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் செருப்பு தேயும் வரை பயன்படுத்துவார்கள். மேலும் 5 முறை அறுந்தால் கூட செருப்பை தைத்து போடுவார்கள். அறுந்த செருப்புகளை தைப்பதற்கு என்றே தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

மலிவு விலையில் செருப்புகள்

திண்டுக்கல்லில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், கடைவீதிகள் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் அறுந்து போன செருப்பை தூக்கி வீசிவிட்டு, புதிய செருப்பு வாங்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து விட்டது. இதேபோல் மலிவு விலையில் செருப்புகள் கிடைக்கின்றன. இதனால் செருப்பு தைக்கும் தொழில் நலிவடைந்து விட்டது.

இதுமட்டுமின்றி ஷூ பாலீஸ் போடும் பழக்கமும் குறைந்து விட்டது. இதன் விளைவாக, திண்டுக்கல்லில் ஒன்றிரண்டு இடங்களில் தான் செருப்பு தைக்கும் தொழிலாளர்களை பார்க்க முடிகிறது. இதுகுறித்து திண்டுக்கல்லில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

அரசு உதவ வேண்டும்

முனியாண்டி:- திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு கடந்த 25 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். இதில் கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் இல்லை. செருப்பை தைத்து போடும் பழக்கம் குறைந்துவிட்டதே அதற்கு காரணம். நாங்களும் தோல் செருப்பு தயாரித்து விற்கிறோம். ஆனால் எங்களிடம் செருப்பு வாங்க யாரும் முன்வருவது இல்லை. இதேபோல் வீட்டிலேயே ஷூ பாலீஸ் போட்டு கொள்கின்றனர். இந்த தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. இதனால் எனது மகனை டெய்லராக்கி விட்டேன். செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு அரசு உதவ வேண்டும். செருப்பு தைக்கும் உபகரணங்களை மானியத்தில் வழங்கி, கடை வைத்து தரவேண்டும். பொதுமக்களும் எங்களிடம் செருப்பு வாங்க வேண்டும்.

முத்தையா:- நான் கடந்த 33 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்கிறேன். முன்பு போன்று யாரும் செருப்பு தைத்து போடுவதற்கு முன்வருவது இல்லை. சாலையோரத்தில் ரூ.100-க்கு செருப்பு விற்கின்றனர். அது ஒருசில மாதங்களில் அறுந்தால் உடனே தூக்கி வீசிவிட்டு, புதிய செருப்பு வாங்குகின்றனர். பழைய செருப்பை தைத்து போடும் பழக்கம் குறைந்துவிட்டது. இதனால் செருப்பு தைக்கும் தொழில் செய்து குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. பலர், இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். எனவே செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு அரசு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்