மக்கள் நீதிமன்றம் மூலம் 3,083 வழக்குகளுக்கு தீர்வு; மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தகவல்

நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 3,083 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கூறினார்.

Update: 2023-05-13 18:45 GMT

நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 3,083 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கூறினார்.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சீனிவாசன் கலந்து கொண்டு சமரச தீர்வு மைய விசாரணையை தொடங்கி வைத்தார்.

இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான சமரச தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவர்களிடம் வழங்கினார்.

பின்னர் நீதிபதி சீனிவாசன் கூறியதாவது:-

3,083 வழக்குகளுக்கு தீர்வு

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் 10 இடங்களில் 25 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 59 வழக்குகள், 1,413 சிறு வழக்குகள் உள்பட 5,771 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,083 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.6 கோடியே 54 லட்சத்து 10 ஆயிரத்து 751 சமரச தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. எனவே பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, நீதிபதிகள் பன்னீர்செல்வம், திருமகள், குமரேசன், விஜயகுமார், மனோஜ் குமார், அமிர்தவேலு, மோகன்ராம், இசக்கியப்பன், சந்தானம், வள்ளியம்மாள், திருவேணி, ஆறுமுகம், பாக்கியராஜ், அருண்குமார், வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ், டாக்டர் பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்