இந்திய கடல் பகுதிக்குள் படகுடன் ஊடுருவிய இலங்கையை சேர்ந்த 2 பேர்

இந்திய கடல் பகுதிக்குள் படகுடன் ஊடுருவிய இலங்கையை சேர்ந்த 2 பேர், மண்டபம் அருகே கடற்கரையில் படகை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தங்கக்கட்டிகள் கடத்தி வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-10-10 18:45 GMT

பனைக்குளம், 

இலங்கை படகு

இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று, இந்திய கடல் எல்லைக்குள் புகுந்திருப்பதாகவும், அதில் 2 பேர் இருப்பதாகவும் மீனவர்கள் மூலம் கடலோர போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே போலீசாரும், இந்திய கடலோர காவல் படையினரும் அந்த படகை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், அந்த படகு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடலோர பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் தெரியவந்ததும் அங்கு விரைந்து சென்றனர். அங்கு கடற்கரையில் படகு மட்டும் நின்றிருந்தது. அதில் இருந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

அந்த படகை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். அது இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு என்று தெரியவந்தது.

கடத்தல்காரர்களா?

பின்னர் அந்த படகை மண்டபம் வடக்கு துறைமுக பகுதிக்கு கொண்டு வந்து போலீசார் நிறுத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு படகு முழுவதும் தீவிர சோதனை செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் படகில் வந்த 2 பேர் யார், கடத்தல்காரர்களா, அகதிகளா அல்லது தங்கக்கட்டிகளை கடத்தி வந்து படகை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில் இலங்கையில் இருந்து படகில் 2 பேர் இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவி வந்து கொண்டிருந்ததை நடுக்கடலில் மீன் பிடித்த மீனவர்கள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வாட்ஸ்-அப்களில் பரவி வருகிறது.

பாதுகாப்பு ஒத்திகை

தமிழகம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் இலங்கையில் இருந்து 2 பேர் படகில் ராமேசுவரம், மண்டபம் கடல் வழியாக வந்து படகை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்