சக்திவாய்ந்த வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் தினமும் அச்சத்தில் வாழும் பிரம்மதேசம் மக்களின் நிலை மாறுமா?

சக்திவாய்ந்த வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் தினமும் அச்சத்தில் வாழும் பிரம்மதேசம் மக்களின் நிலை மாறுமா?.

Update: 2023-04-09 18:45 GMT

மரக்காணம் ஒன்றியம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல், கீழ்பூதேரி, கட்டளை, தென்னம்பூண்டி, குருவம்மாபேட்டை, அழகியப்பாக்கம், கீழ்அருங்குணம், பிரம்மதேசம், வெள்ளகுளம், வடகொளப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இந்த கல்குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன. பின்னர், பாறைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கிரஷர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ¼, ½, ¾ இஞ்ச் அளவு ஜல்லிகளாக உடைக்கப்படுகிறது. மேலும் எம்.சாண்டும், பி.சாண்டும் அரைக்கப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

அனுமதியின்றி இயங்கும் கல்குவாரிகள்

இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதி இன்றி இயங்குகிறது. அதாவது, இந்த குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து எடுப்பதற்கான உரிய அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கவில்லை. இருப்பினும் அந்த குவாரிகள் பகல் மட்டுமின்றி இரவிலும் இயங்குகிறது. இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

தாக்குப்பிடிக்காத சாலைகள்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிய கருத்துகள் இதோ:-

இங்குள்ள குவாரிகளில், அளவுக்கு அதிகமாக வெடி வைத்து, அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. நிர்ணயித்த நேரத்தை கடந்து, இரவிலும் வெடி வைத்து பாறைகளை உடைக்கின்றனர். லாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக எடுத்து செல்கின்றனர். ஒரே 'பெர்மிட்டை' வைத்து பல முறை கனிம வளத்தை இங்கிருந்து கடத்தி செல்கின்றனர். கிராமப்பகுதி சாலைகள் 5 ஆண்டுக்கு ஒருமுறை சீரமைக்கப்பட்டு வந்தது. தற்போது, கனிமவளம் ஏற்றிய டிப்பர் லாரிகள் அதிக பாரத்துடன், அதிவேகமாக செல்வதால், கிராம சாலைகள் தாக்குப்பிடிப்பதில்லை. புதிதாக போடப்பட்ட ஓராண்டிலேயே சாலைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

வீட்டு சுவர்களில் விரிசல்

ஜல்லி மற்றும் எம்.சாண்டு ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிவேகமாக செல்வதால் திண்டிவனம்-மரக்காணம் சாலையிலும், கிராம சாலையிலும் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. குவாரிகளில் விதிகளை மீறி சக்திவாய்ந்த வெடி வைக்கும் போது ஏற்படும் புகை மற்றும் தூசியால், அருகில் உள்ள விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. வீடுகளின் மீது கற்கள் விழுகிறது. பாறைகளுக்கு வெடி வைப்பதால் ஏற்படும் அதிர்வால், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. அங்குள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, சுவர்களில் விரிசல் விழுந்து, மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். விதிகளை மீறி இரவிலும் கிரஷர்கள் இயங்குவதால் அதில் இருந்து ஏற்படும் சத்தத்தால் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். கிரஷர்களும் திறந்தவெளியில் இருப்பதால் காற்றில் தூசி பறந்து அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்படுகிறது.

இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை

சில இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை சுரண்டி எடுத்துள்ளனர். தேவை முடிந்ததும், அந்த குவாரியை அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர். அந்த குவாரிகளில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் குளித்தபோது சிலர் மூழ்கி இறந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. மக்களையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க இனியாவது அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக பிரம்மதேசம் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளிலும், கிரஷர்களிலும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்