அம்பையில் இறைச்சிக்கடை அகற்றம்; உரிமையாளர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
அம்பையில் ஆக்கிரமிப்பில் இருந்த இறைச்சிக்கடை அகற்றப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பை:
அம்பை- முக்கூடல் மெயின் ரோடு ஆசிரியர் காலனி பஸ்நிறுத்தம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான சுகாதார வளாகத்தின் வாசலை ஆக்கிரமித்து கோவில் குளத்தைச் சார்ந்த பெருமாள் என்பவர் இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளார். நகராட்சி அலுவலர்கள் பலமுறை கூறியும் தொடர்ந்து கடை நடத்தி வந்தார்.இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று நேற்று ஆக்கிரமிப்பு இறைச்சிக்கடையை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர் பெருமாள் வெட்டிய இறைச்சியுடன், நகராட்சி அலுவலகம் மற்றும் அம்பை தாலுகா அலுவலகம் சென்று போராட்டம் நடத்த முயன்றார். இதனை அறிந்த அம்பை போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கடை உரிமையாளரை எச்சரித்து அனுப்பினர். இதனால் தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.