பஸ் கண்டக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கோவிலூர் அருகே பஸ் கண்டக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்
திருக்கோவிலூர்
பஸ் கண்டக்டர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 27). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவருக்கும், கண்டாச்சிபுரம் தாலுகா வடகரைதாழனூர் கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவரின் மகள் கீர்த்தனா(வயது 23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. யோகேஷ்(1½) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கீர்த்தனா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கீர்த்தனா பரிதாபமாக இறந்தார்.
சாவில் சந்தேகம்
இதுகுறித்து கீர்த்தனாவின் தந்தை அன்பு திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகளுக்கு உரிய சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடைபெற்றது. இதன் பிறகும் பெற்றோர் வீட்டுக்கு சென்று மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் வாங்கி வருமாறு கீர்த்தனாவை தேவேந்திரன் அடிக்கடி துன்புறுத்தி இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம். எனவே எனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்தார்.
கோட்டாட்சியர் விசாரணை
மேலும் கீர்த்தனாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து திருக்கோவிலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.