தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
கறம்பக்குடி அருகே தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு பொன்னன் விடுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (40). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது வலது கை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி ரவிச்சந்திரன் தனது வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.