போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்: தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் கல்லூரி மாணவி புகார்

தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில், போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2022-12-16 06:40 GMT

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 46). இவர், திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சிவகலா (40). இவர்களுக்கு சிவரஞ்சனி (19) என்ற மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் சிவரஞ்சனி, சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகலா, வீட்டில் மர்மமான முறையில் இறந்து விட்டார். சிவகலா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் ரவீந்திரன் கூறினார்.

ஆனால் இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்காமல் சிவகலாவின் உடலை அவரது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துவிட்டார்.

இந்த நிலையில் தனது தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தாய் சாவுக்கு தந்தை ரவீந்திரன்தான் காரணம் எனவும் அவர்களுடைய மகள் சிவரஞ்சனி, பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் ரவீந்திரனை பிடித்து விசாரித்தனர். போலீசாரிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.

மேலும் சிவகலா இறந்ததை போலீசாருக்கு தெரிவிக்காமல் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டதால் இதுபற்றி விழுப்புரம் தாசில்தாரிடம் கடிதம் கொடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) சிவகலாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிவகலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரவீந்திரனே மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்