தர்மபுரி நகரில் ரூ.4¼ கோடியில் 2,700 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை-நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
தர்மபுரி:
தர்மபுரி நகரில் ரூ.4¼ கோடி மதிப்பில் 2,700 எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்க நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார். நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் மாதையன், கணக்கு அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினர். தர்மபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் ரூ.4 கோடியே 37 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 700 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைப்பது, அன்னசாகரத்தில் 50 பெண்கள், 50 ஆண்கள் என வீடற்றோர் தங்குவதற்கு ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய விடுதி கட்டுவது என்பன உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டன. பின்னர் அந்த திட்டங்களை நிறைவேற்ற நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வார்டுக்கும் 3 பேர் கொண்ட தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசின் அங்கீகாரம் பெற்ற இந்த கமிட்டிக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. எதிர்ப்பு
இந்தநிலையில் தர்மபுரி டவுன் பஸ் நிலையம் எதிரில் ஜெ.ஜெ. மார்க்கெட்டில் உள்ள 3 கடைகளின் உரிமம் ரத்து, நீண்ட காலமாக வாடகை நிலுவையில் உள்ள கடைகளின் உரிமத்தை ரத்து செய்தல், குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை புதுப்பித்தல் பணி, நகராட்சி தெரு விளக்குகளை பராமரிக்கும் பணி தனியாருக்கு விடுதல் ஆகிய தீர்மானங்களுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடை வாடகைகளை சட்டப்படி முறையாக வசூலிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதே போன்று நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.