பெருநாழியில் நாளை மாட்டு வண்டிப்பந்தயம்
கமுதி அருகே பெருநாழியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாட்டு வண்டிப்பந்தயம் நடைபெறுகிறது. இதில் 7 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
கமுதி,
கமுதி அருகே பெருநாழியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாட்டு வண்டிப்பந்தயம் நடைபெறுகிறது. இதில் 7 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
கருணாநிதி நூற்றாண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் மேற்கு பகுதியில் பெருநாழி கிராமம் அமைந்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களையும் இணைக்கும் பகுதியாக பெருநாழி விளங்கி வந்தது. கருணாநிதியின் நெருங்கிய நண்பராக பெருநாழியில் கருணை ஜமால் என்பவர் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருநாழியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பெருநாழியில் சின்ன மாடு, பெரிய மாடு பந்தயங்கள், குதிரை வண்டி பந்தயம், கபடி போட்டி, கரகாட்டம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வில்லுப்பாட்டு, அரிச்சந்திர நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளன.
அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த பரிசளிப்பு வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், கீதா ஜீவன், மூர்த்தி மற்றும் மாவட்டச்செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
பெரிய மாடு பந்தயத்திற்கு முதல் பரிசாக ரூ.1½ லட்சம், 2-ம் பரிசு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், 3-ம் பரிசு ஒரு லட்சம் ஆறுதல் பரிசு ரூ.20 ஆயிரம், நடுமாடு பந்தயத்தில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரம்,3-ம் பரிசு ரூ.30 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.10 ஆயிரம், சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசு ரூ.30 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பூஞ்சிட்டு பந்தயத்தில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.13 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.3 ஆயிரம், பெரிய குதிரை பந்தயத்தில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.50 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.10 ஆயிரம், நடுக்குதிரை பந்தயத்தில் முதல் பரிசு ரூ.60 ஆயிரம்,2-ம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சின்ன குதிரை பந்தயத்தில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம் மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பெருநாழி போஸ் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிகுமார் நன்றி கூறுகிறார். இதையொட்டி பெருநாழி பகுதிகளில் மின்அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள் என பெருநாழி போஸ் கூறினார்.