இந்துசமய அறநிலையத்துறைக்கு நவீன வசதிகளுடன் கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறைக்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் வகையில் அந்த கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி வைத்தார்.
இந்தத் துறையின் வரலாற்றில் இல்லாத அளவில் ஒப்பந்த காலத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அந்த கூடுதல் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.
இந்த கட்டிடம், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர்களின் அறைகள், தலைமைப் பொறியாளரின் அறை, இணை ஆணையர்களின் அறைகள், உதவி ஆணையர்களின் அறைகள், திருப்பணி பிரிவு, பொறியியல் பிரிவு, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
மேலும், திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4 நுழைவு மண்டபங்கள், 4 அவரசகால வழிகள், காத்திருப்பு கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகள், கடைகள், மருத்துவ மையம், கட்டண சீட்டு விற்பனை மையம், பிரசாத விற்பனை நிலையம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்;
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் நேற்று திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.30.43 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
ஊராட்சி கட்டிடங்கள்
ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008-ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 277 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 205 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
7 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கான தனி அலுவலக இடம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
புதிய ஸ்கார்பியோ கார்கள்
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அந்த ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிப்பதற்காக 2008-ம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப்பட்டன. 13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வரசால் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.