சேலம் களரம்பட்டியில் உள்ள புத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
ஆடித்திருவிழா
சேலம் களரம்பட்டியில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. கடந்த 1-ந் தேதி மாலை சாமி பெருமாள், தங்கை புத்துமாரியம்மனுக்கு ஊர் பொதுமக்களால் சீர்கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவில் கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பால்குட ஊர்வலம்
இந்நிலையில் நேற்று காலை ஏராளமான பெண்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பொங்கல் வைத்தும் அம்மனை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, களரம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக புத்துமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது.
இதில் களரம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆடித்திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) அன்னதானம் நடக்கிறது. காலை 10 மணிக்கு புத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
-------------------