2 டாக்டர்கள் வீடுகளில் நடந்த கொள்ளை வழக்கில் அண்ணன்-தம்பி கைது
வேலூரில் டாக்டர் வீடுகளில் நடந்த கொள்ளை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8½ லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
வேலூரில் டாக்டர் வீடுகளில் நடந்த கொள்ளை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8½ லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டாக்டர்கள் வீடுகளில் கொள்ளை
வேலூர் வேலப்பாடி சேர்வை முனுசாமி நகர், சகுந்தலாம்மாள் தெருவை சேர்ந்தவர் மணிகண்ணன் (வயது 52). இவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் 24-ந் தேதி அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டில் புகுந்தனர். அங்கிருந்து தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதே போல சத்துவாச்சாரி பகுதியில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மற்றொரு டாக்டரான முகமது என்பவர் வீட்டிலும் கொள்ளை அடிக்கப்பட்டது.
மணிகண்ணன் வீட்டில் 22½ பவுன் நகைகள், ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
தனிப்படை
இந்த இரு சம்பவங்கள் அடிப்படையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.
அண்ணன் -தம்பி கைது
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதி, இளங்கோ நகரை சேர்ந்த மொய்தீன் என்ற சதக்கதுல்லா (வயது 33), ஷாஜகான் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் அண்ணன்- தம்பி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், 2½ பவுன் நகைகள், ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், 2,500 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.