வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளை

மங்களமேடு அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-16 17:57 GMT

நகைகள் கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு பேரூராட்சி ஜமாலியா நகரை சேர்ந்தவர் ஜாகீர்உசேன்(வயது 51). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ பரிசோதனைக்காக தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 15-ந் தேதி காலை சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாகீர்உசேன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஜாகீர்உசேன் உடனே மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்