வருங்கால மனைவிக்கு காதலர்தின பரிசளிக்க நகைக்கடையில் 10 பவுன் திருடிய ஊழியர் - மணப்பெண்ணின் அக்காளும் சிக்கினார்

வருங்கால மனைவிக்கு காதலர்தின பரிசளிக்க நகைக்கடையில் 10 பவுன் நகையை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மணப்பெண்ணின் அக்காளும் சிக்கினார்.

Update: 2023-02-15 19:58 GMT


வருங்கால மனைவிக்கு காதலர்தின பரிசளிக்க நகைக்கடையில் 10 பவுன் நகையை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மணப்பெண்ணின் அக்காளும் சிக்கினார்.

10 பவுன் திருட்டு

மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 13-ந்தேதி நகைகளை மேலாளர் கார்த்திக் சரிபார்த்தார். அப்போது 10 பவுன் நகை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இது குறித்து தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

தங்கச்சங்கிலி விற்பனை பிரிவில் வேலை பார்த்த திருச்சியை சேர்ந்த அப்துல்பயாஸ் (வயது 26) என்பவர், ஒரு நகையை எடுத்து நைசாக வேறொரு பெண்ணிடம் கொடுத்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

காதலர்தின பரிசளிக்க

அப்துல்பயாஸ் திருச்சி நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும், மணப்பெண்ணுக்கு காதலர் தின பரிசாக கொடுப்பதற்காக, அவர் வேலைபார்த்த நகைக்கடையில் சங்கிலியை திருடியதும் தெரியவந்திருக்கிறது.

அதாவது, சம்பவம் நடந்த அன்று, அவருடைய காதலியின் அக்காள் திவ்யாவை கடைக்கு அழைத்துள்ளார். அவரும் கடைக்கு வந்து 15 கிராம் பழைய நகையை கொடுத்து புதிதாக 13 கிராம் எடையில் நகை ஒன்றை வாங்கினார். அதனை பையில் வைத்து கொடுத்த அப்துல்பயாஸ், 13 கிராம் நகையை எடுத்து தான்வைத்துக் கொண்டு, காதலிக்கு கொடுக்க 10 பவுன் நகையை மோசடியாக கொடுத்து அவரை அனுப்பி வைத்தது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் கூறினா்.

2 பேர் கைது

அதை தொடர்ந்து போலீசார் கோவையில் இருந்து திவ்யாவை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அப்துல்பயாஸ், அவருடைய காதலியின் அக்காள் திவ்யா (29) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து நகையை கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்