செங்கல் உற்பத்தி பணி தீவிரம்

மெலட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக செங்கல் உற்பத்தி செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-30 19:53 GMT

மெலட்டூர்;

மெலட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக செங்கல் உற்பத்தி செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செங்கல் உற்பத்தி

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் மெலட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சுரைக்காயூர், கோடுகிளி, காந்தாவனம் மற்றும் வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் ஆற்று படுகைகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் அதாவது ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கி ஜூலை மாதம் வரை மழைபொழிவு இல்லாத கோடை காலத்தில் செங்கல் உற்பத்தி செய்யும் பருவமாகும்.

மழை பொழிவு

இந்த 6 மாத காலத்தில் விவசாய வேலையும் பெரிதாக இருக்காது என்பதால் இந்த நாட்களில் செங்கல் உற்பத்தி செய்யும் பணியில் விவசாய தொழிலாளர்களும் ஈடுபடுவார்கள். இந்த 6 மாத காலம் செங்கல் உற்பத்தி செய்வதன் மூலம் இதில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்கள் வருவாய் ஈட்டமுடியும். ஆனால் இடையில் மழை பெய்தால் செங்கல் உற்பத்தி வெகுவாக பாதிப்பதோடு வெட்ட வெளியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பச்ச கற்கள் மழையில் நனைந்து கரைந்து வீணாகி விடும். இதனால் தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டமும் ஏற்படுவதோடு செங்கல் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கும்.

வெயில்

செங்கல் உற்பத்தி வேலைக்கு எப்போதுமே தேவை இருக்கும். இதனால் கோடை காலம் தொடங்கும் முன்பே செங்கல் சூளை உரிமையாளர்கள் முன்பணம் கொடுத்து செங்கல் உற்பத்தி செய்யக்கூடிய தொழிலாளர்களை முன்பதிவு செய்து கொள்வார்கள். ஜனவரி மாதத்தில் செங்கல் உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி விடுவார்கள்கட்டுமான பணிக்கு சிமெண்டு கற்கள். ஹாலோ பிளாக், பேவர் பிளாக் கற்கள் என பல வகையான கற்கள் வந்த போதிலும் செங்கல்லுக்கு இன்றைக்கும் தனி மவுசு உண்டு.

இதனால் தமிழகத்தில் பல பகுதியில் செங்கல் உற்பத்தி லாபகரமாக செய்யக்கூடிய தொழிலாக இருந்து வருகிறது. மெலட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக செங்கல் உற்பத்தி செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் செங்கல் உற்பத்தி தொழில் செய்வதிலும் பல பிரச்சினைகள் உள்ளதாக செங்கல் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஈரப்பதம்

இதுகுறித்து செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-

பொதுவாக கோடைகாலத்தில் தான் செங்கல் தயார் செய்ய முடியும் இரண்டு பேர் சேர்ந்து நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 1200 வரை பச்ைச கல் தயார் செய்யமுடியும். முதல்நாள் தயார் செய்த ஈரப்பதம் உள்ள செங்கல்லை மறுநாள் பிசிறு இல்லாமல் சுத்தம் செய்து, 2 அல்லது 3 நாள் நன்கு வெயிலில் காய வைத்து மழையில் நனையாமல் பாதுகாத்து செட்டில் அடுக்கி வைத்தால் தான் எங்களுக்கு 1000 ரூபாய் கூலியாக கிடைக்கும் . மழை பெய்தால் தொடர்ந்து செங்கல் தயார் செய்யவும் முடியாது.

வங்கி கடன்

தயார் செய்து வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ள பச்ைச கல்லும் நனைந்து வீணாகி போகும். மேலும் செங்கல் உற்பத்தியில் ஈடுபடும் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. செங்கல் சூளையிலேயே தங்கினால் தான் இந்த வேலையை தொடர்ந்து செய்யமுடியும். செங்கல் சூளைகள் பெரும்பாலும் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுபகுதியில்தான் இருக்கும்.

இரவு நேரத்தில் பாம்புகள் உள்பட விஷ ஜந்துகளால் பல சமயங்களில் ஆபத்துகள் ஏற்படும்.செங்கல் தொழிலுக்கு தேவையான மூலதனத்தை வங்கிகள் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி தான் தொழில் செய்து வருகிறோம். சில வங்கிகள் கடன் கொடுத்தாலும் தேவையான முழு தொகையை கொடுப்பதில்லை. எனவே வங்கிகள் செங்கல் சூளை உற்பத்திக்கு தேவையான கடன் தொகையை முழுமையாக கொடுக்க வேண்டும். இவ்வாறு அவா்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்