செங்கல் சூளை அதிபர் கத்தியால் குத்திக்கொலை

ஆரல்வாய்மொழியில் செங்கல் சூளை அதிபரை வழிமறித்த கும்பல் அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றது.

Update: 2023-06-09 20:29 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் செங்கல் சூளை அதிபரை வழிமறித்த கும்பல் அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றது.

செங்கல்சூளை அதிபர்

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). இவர் அந்த பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு என்ற அன்பழகன் (29) என்பவருக்கும் கடந்த மாதம் 5-ந் தேதி ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஏசுதாசன், அவரது மகன் சுதன் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து அன்புவை பீர்பாட்டிலால் குத்தினர். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன் மீது பீர்பாட்டிலால் தாக்கிய ஏசுதாசன் மீது அன்புக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு ஏசுதாசன் வீட்டுக்கு செல்ல மிஷன் காம்பவுண்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

குத்திக்கொலை

அப்போது அங்கு ஏற்கனவே தயாராக நின்ற அன்பு உள்பட 5 பேர் கும்பல் ஏசுதாசனை திடீரென வழிமறித்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஏசுதாசன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் சுற்றி வளைத்த கும்பல் ஏசுதாசனை சரமாரியாக கத்தியால் குத்தியது. இதில் அன்பு ஆவேசத்துடன் கொடூரமாக தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் நினைத்த வெறிச்செயலை நிறைவேற்றி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பியது. இதற்கிடையே கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய ஏசுதாசனை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டதோடு குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதற்கான பணியை முடுக்கி விட்டார்.

கும்பலுக்கு வலைவீச்சு

பின்னர் கொலை செய்யப்பட்ட ஏசுதாசன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடிவருகின்றனர்.

செங்கல்சூளை அதிபரை ரவுடி உள்பட 5 பேர் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்