சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை
உறவுமுறை சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
சென்னை மந்தைவெளியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டெல்லியம்மாள். இவருடன், இவரது மகன் மற்றும் மருமகள் ஜெகதீஸ்வரி ஆகியோரும் இருந்து வந்தனர்.
மாமியார், கணவர் மறைவுக்கு பின்பு அந்த குடியிருப்பை தனது பெயருக்கு மாற்றுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு உறவுமுறை சான்றிதழ் கோரி ஜெகதீஸ்வரி மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அந்த சமயத்தில் பணியில் இருந்த தாசில்தார் சுப்பிரமணியன் (வயது 47), உறவுமுறை சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
கைது
இதுகுறித்து ஜெகதீஸ்வரியின் உறவினர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை ஜெகதீஸ்வரி கொடுத்த போது அதை பெற்றுக்கொண்ட தாசில்தார் சுப்பிரமணியனை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து கணக்கில் வராத பணம் எனக்கூறி 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
4 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மணிமேகலை முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் உஷாராணி ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
நிரூபிக்கவில்லை
அதேவேளையில் சுப்பிரமணியனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் அவர் சட்டவிரோதமாக பெற்றது தான் என லஞ்ச ஒழிப்புத்துறை நிரூபிக்காததால் சுப்பிரமணியனிடம் இந்த தொகை திரும்ப வழங்கப்பட வேண்டும்.
அதேவேளையில் மேல்முறையீடு ஏதேனும் செய்யப்படும்பட்சத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை பொறுத்து அந்த தொகையை திரும்ப வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.