வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் மலர்க்கொடி(வயது 55). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த குத்துவிளக்கு, தட்டு உள்ளிட்ட 2 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மலர்க்கொடி அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.