5 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு

கீழ்வேளூர் அருகே 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வர்த்தக சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-28 17:14 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வர்த்தக சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆழியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை கடைகளை திறக்க வந்தபோது 6 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் முகமது யூசுப் என்பவரின் மெடிக்கல் கடையில் ரூ.60 ஆயிரம் மற்றும் செல்போன், மருந்து பொருட்களையும், செந்தில்குமார் என்பவரின் டைலர், பேன்சி கடையில் ரூ.12 ஆயிரம் மற்றும் 1½ பவுன் நகையையும், தனசேகரன் என்பவரின் சைக்கிள் கடையில் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

மேலும் பீர் முகமதுவின் மளிகை கடை, பன்னீர்செல்வத்தின் மெடிக்கல் கடை, செந்தில்நாதனின் பலசரக்கு கடை ஆகிய 3 கடைகளில் மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதேபோல கீழ்வேளூர் அருகே குருக்கத்தி பஸ் நிறுத்தம் எதிரில் நெல், உளுந்து வியாபாரம் செய்து வரும் கீழ்வேளூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்த பிரபாகரன் மனைவி சசிகலா என்பவரின் கடையில் ரூ.8 ஆயிரத்தையும், கீழ்வேளூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ரமணி மனைவி மேகலாவின் மளிகை கடையில் ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆழியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

சாலை மறியல்

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடைகளை அடைத்து ஆழியூர் வர்த்தக சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் அச்சம்

கீழ்வேளூர் அருகே ஆழியூர் மற்றும் குருகத்தி ஆகிய பகுதியில் 5 கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்னர்.

Tags:    

மேலும் செய்திகள்