மளிகைக்கடையை உடைத்து தொடர் அட்டகாசம்: கரடியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி -வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கோத்தகிரி அருகே மளிகைக் கடையை உடைத்து அட்டகாசம் செய்து வரும் கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-06 13:06 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே மளிகைக் கடையை உடைத்து அட்டகாசம் செய்து வரும் கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கரடி

கோத்தகிரி சுற்றுவட்டாரப் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. கோத்தகிரி அருகே உள்ள கொட்டநள்ளி கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கயில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து உலா வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் அந்த கரடி கடந்த சிலநாட்களுக்கு முன் அங்குள்ள ஜானகி என்பவரின் மளிகை கடையை உடைத்து உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.

உணவு பொருட்கள் சேதம்

இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். வனத்துறையினரிடம் பொதுமக்கள் ஊருக்குள் உலா வரும் கரடியால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் தினம்தோறும் இரவு நேரங்களில் தீ முட்டி கரடியை விரட்டி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு கரடி மீண்டும் அதே மளிகை கடையை உடைத்து, அங்குள்ள உணவுப் பொருட்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

சாலை மறியல் முயற்சி

இதையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அவ்வழியாக வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியைப் பிடிக்க உடனடியாக கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இதனால் சமாதானமடைந்த கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்