பற்களை பிடுங்கிய விவகாரம்; பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் 10-ந்தேதி வரை புகார் அளிக்கலாம் என அறிவிப்பு

பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-30 12:41 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டு, பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணை கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் 6-க்கும் மேற்பட்ட நபர்கள் தாங்களும் பாதிக்கப்பட்டதாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று சார் ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருப்பின் வரும் ஏப்ரல் 10-ந்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார்களை தெரிவிக்கலாம் எனவும், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்