"அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இனி காலை உணவு திட்டம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன உழைக்கத் தூண்டுகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-01-13 08:08 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு பதிலுரை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு மேற்கோள்களைக் காட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்வோம் என்பதே நமது முழக்கம்.

பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாக உள்ளது. 86 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக விரைவில் உயரும். மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெற வேண்டியுள்ளது. நடுத்தர குடும்பங்களை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10 ஆயிரம் புதிய அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் என்று ஒரு கூட்டம் வதந்திகளை பரப்பி வருகிறது. நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரானவர்கள், மதத்திற்கு அல்ல, ரூ.3.500 கோடி மதிப்புடைய கோயில் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் யாருடைய ஆட்சியில் நடந்தது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதால் புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்தாண்டு ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படும். 2030க்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதே நோக்கம்.

இளைஞர்களின் நலன், பெண்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். வட மாநில தொழிலாளர்களின் தகவல்களை காவல்துறை சேகரித்து வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுவது கண்காணிக்கப்படும். மருத்துவ படிப்பிற்காக 5 பன்னாட்டு நூல்கள் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

நமக்கு நாமே திட்டம் பேரூராட்சி, நகராட்சிகளிலும் செயல்படுத்தப்படும். முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறேன்.

முதற்கட்டமாக 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ சாலைகள் ரூ.4 ஆயிரம் கோடியில் சீரமைக்கப்படும். காலை சிற்றுண்டி திட்டம் 2023-24-ம் ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

மக்களுக்காக இருக்கிறேன். அதற்காக உண்மையாக உழைக்கிறேன். முடித்தே தீர்வோம் என்பதே வெற்றிக்கான இலக்கு. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன உழைக்கத் தூண்டுகிறது

மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன். இரவு தூக்கம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

"வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு" என முதலமைச்சர் உரையை நிறைவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்