காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 90% ஆக அதிகரிப்பு - மாநில திட்டக்குழு தகவல்
மாணவர்களின் வருகைப் பதிவு 90 முதல் 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு உயர்ந்துள்ளதாக, முதல்-அமைச்சரிடம் மதிப்பீட்டு அறிக்கை அளித்த மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"முன்னதாக பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை இருந்து வந்தது. காலை உணவுத் திட்டம் வந்த பிறகு மாணவர்களின் வருகைப் பதிவு 90 முதல் 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடிப்பதும் தற்போது இல்லை. காலை 8 மணிக்கு முன்னரே பள்ளிக்கு சென்றுவிடுகின்றனர்.
மேலும் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகளை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூறுகின்றனர்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.